ஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள்! மாநிலத்தில் ஆளமுடியுமா?

ஆள் பிடிக்கும் தேசிய கட்சிகள்!
மாநிலத்தில் ஆளமுடியுமா?
Published on

சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவர் சந்திக்க வந்தார். அவர்களது பேச்சுக்கு நடுவே Lead Generation, SEO, Content Marketing, CRM, Top of the funnel, Return on investment, partner Marketing போன்ற ஆங்கில வார்த்தைகள்  சரளமாக புழங்கின. சில ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டங்களில் புழங்கும் வார்த்தைகள் தற்போது அரசியல் கட்சிகளில் ஆலோசனை கூட்டங்களுக்கு இடம் மாறியுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளிலும் அணுகுமுறையிலும் 360 டிகிரி மாற்றம் நிகழ்ந்துள்ள சூழலில் ஊடகங்களில் மட்டும் அரசியல் பற்றிய  செய்திக் கட்டுரைகள் மந்தமாகவே உள்ளதுபோல் தோன்றுகிறது.

எந்த ஒரு விஷயத்திலும் கருதப்படும் நிலைக்கும் உண்மையான எதார்த்தத்துக்கும் இடைப்பட்ட மாயையை  விளம்பர நிறுவனங்கள் மிகச் சரியாக பயன்படுத்தும். தற்போது அரசியல் கட்சிகளும் விளம்பர நிறுவனங்களின் துணையோடு மார்க்கெட்டிங்கில் இறங்கிவிட்டன.

உண்மை எது பொய் எது என்று தெரியாத கலங்கிய குட்டையில் அரசியல்வாதிகளின் மீன்பிடித் தொழில் அமோகமாக நடக்கிறது.

இந்த சிரமமான சூழலில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தல் வரை நடந்த 43 தேர்தல்களின் முடிவுகளை ஆராயத் தொடங்கும் போது கிடைத்த விடைகள் பெரும்பாலான ஊடகங்கள்  சொல்லும் கதைகளிலிருந்து வேறுபட்டுள்ளன.

சமீபத்தில் தேர்தல் முடிந்த பீகாரின் நிதீஷ்குமாருக்கு மிகப்பெரிய பிம்பம்  கொடுக்கப்பட்டு அவரது வல்லமைகளைப் பலர் பறைசாற்றினர். 1990&91 ஆம் ஆண்டில் பீகாரின் தனிநபர் வருவாய் (ணீஞுணூஞிச்ணீடிtச் ண்tச்tஞு எஈக) 2,660 ரூபாய். இந்தியாவின் தேசிய தனிநபர் வருமானம் 5,365 ரூபாய். தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 4983 ரூபாய். 2004&05&இல் பீகாரில் இது ரூ 7914. இந்திய அளவில் ரூ 24,143, தமிழ்நாட்டில் இது வளர்ந்து 30,062 ஆக இருந்தது. அப்படியே 2019&20க்கு வருவோம். பீகாரின் தனிநபர் வருமானம் ரூ 46,664. இந்தியாவின் நிலை ரூ 1.34 லட்சம். தமிழ்நாடு 2.18 லட்ச ரூபாய் என்ற அளவில் உயரத்தில் உள்ளது.(ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அக் 17,2020) இந்த புள்ளிவிவரத்தை கவனிக்கும்போது ஊடகங்கள் சொல்வதைப் போன்று பெரிய சாதனை ஒன்றும் நிதீஷ்குமார் நிகழ்த்திவிடவில்லை. அவர் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தில் 33% சதவீதம் தான் பீகாரின் தனிநபர் வருமானம். பதினைந்து ஆண்டுகளில் அது 1% சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

2020 இல் நடந்த பீகார் தேர்தலில் வாக்காளர்25கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 37.26 சதவீதமும் மகா கூட்டணிக்கு 37.23 சதவீதமும்  வாக்களித்துள்ளனர். இரண்டு கூட்டணிகளுக்கிடையே வாக்கு வித்தியாசம் வெறும் 12,768 வாக்குகள் மட்டுமே. 14 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் இன்னும் நிதீஷ் மாநிலத்திற்குப் போதுமானது செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். காங்கிரஸின் பலவீனம், மோடியின் பிரசார பலம் ஆகியவற்றின் உதவியோடு வென்ற நிதீஷ் இன்னும் புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பதை வருங்காலத்தில் பார்ப்போம்.

2004 - இல் பாஜக ஆட்சியை இழந்தபோது வாஜ்பாய், ‘‘நாம் காங்கிரஸைப்போல்  மீண்டும் மீண்டும் ஜெயிக்க வேண்டும்,'' என்றார். அவரது கனவை நனவாக்கும் விதமாக மோடியின் காலத்தில் இரண்டுமுறை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றிருக்கிறது. ஆனால் சட்டமன்ற தேர்தல்களில் நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 282 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளிலும் மற்றவர்கள் 207 தொகுதிகளிலும் வென்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளிலும் காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளிலும் வென்றனர்.

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சென்ற ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தலைவிட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.

களநிலவரம் சட்டமன்றத் தேர்தல்களில் வேறுவிதமாக உள்ளது. 2014&க்கும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் 41 மாநிலங்களின் (சிலவற்றில் இருமுறை) 5424 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்துள்ளது. இதில் பாஜக 1602 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1064 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் 155 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் (சில பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில்) 2603 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

இந்த 41 மாநிலத் தேர்தல்களில் 100&க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் 20 தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த மாநிலங்களில் 36 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை வென்று பாஜக உறுதியாக காலூன்றியிருக்கும் மாநிலங்கள் என்று உ.பி, ம.பி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பெரிய மாநிலங்களில் மூன்றைத் தவிர மற்றவற்றில் காங்கிரஸ் பலவீனமாகத் தானிருக்கிறது. ஆனால் காங்கிரஸைவிட பலவீனமாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தமது செல்வாக்கை இழந்து வருகின்றனர். பீகாரில் பெற்ற சமீபத்திய வெற்றி அவர்களை ஆசுவாசப்படுத்தலாமே தவிர, தங்களது பழைய நிலைக்கு அடைய காங்கிரஸை விட அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும்.

அறுபதுகளில் மாநிலக்கட்சிகள் வலுப்பெறத் தொடங்கின. கடந்த முப்பது ஆண்டுகளில் மாநிலக் கட்சிகள் வீச்சு அதிகரித்துள்ளது.

கூட்டணியின் ஆதரவோடு நாடுதழுவிய வெற்றியைப் பெறுவதை விட ஒவ்வொரு மாநிலமாக வெல்வதற்கே மிகவும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து திறமையான நபர்களைத் தேர்வு செய்து தங்களுடன் சேர்த்துக்கொள்ளும். இதைப் பின்பற்றி மாநிலங்களில் வளர நினைக்கும் தேசியக்கட்சிகள் மாநிலக் கட்சிகளிடமிருந்து ஆள் பிடிக்கின்றன. இன்று வெற்றிபெறும் கட்சிக்குத் தாவும் நபர்கள் நாளை மற்றொரு கட்சிக்குத் தாவ மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தற்போதைய சூழல்படி மாநிலங்களில் அதிகாரத்தை பிடிக்க தேசிய கட்சிகள் இரண்டு விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.

1. அந்தந்த மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை வார்த்தெடுக்க வேண்டும். அப்படி உருவாகும் தலைவர்களுக்கு தொடர்ச்சியான பொறுப்புகளைத் தர வேண்டும். தேசிய தலைமையின் நெருக்குதல் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட மாநிலத் தலைவருக்கு  வாய்ப்பளிக்க வேண்டும். தற்போது தேசிய கட்சிகள் பலமாக இருக்கும் மாநிலங்களின் இப்படியான தலைவர்கள் இருந்தது, இருப்பது கண்கூடு.

2. இந்தியாவின் பன்முகத்தன்மை விஸ்தாரமானது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வெவ்வேறான அபிலாஷைகளும் தேவைகளும் உள்ளன. இவற்றின் வீச்சு பல வேளைகளில் தேசியத் தலைமைக்கு புரியவைக்கப்படுவதில்லை. தெலுங்கானா மக்களின் தனிமாநில ஆசையை தேசிய கட்சிகள் புரிந்துக்கொள்ளவில்லை. ஆனால் மாநில கட்சியொன்று தொடர்ந்து போராடி பெற்றுக்கொடுத்தது. தொடர்ச்சியாக அந்த மாநிலக் கட்சி இரண்டுமுறை அதிகாரத்தை தேர்தலின் மூலம் பெற்றது.

இந்த இரண்டு விஷயங்களையும் தொடர்ந்து செயல்படுத்தும் தேசிய கட்சிகள் மாநிலத்தில் அதிகாரத்தைப் பிடிக்கும்.

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com